Wednesday, January 9, 2013

புலிகள் சரணாலய சுற்றுலா தலங்கள் ஓரிரு நாளில் திறப்பு


வால்பாறை: உச்சநீதிமன்ற தடை நீங்கியுள்ளதால், நாடு முழுவதும் உள்ள புலிகள் சரணாலயங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்பட உள்ளன. புலிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் நாடு முழுவதும் உள்ள புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 24ம் தேதி உத்தரவிட்டது. இவற்றை பாதுகாக்க புதிய விதிமுறைகளை வெளியிட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி புலிகள் சரணாலயங்களில் உள்ள சுற்றுலா வசதிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படிப்படியாக நீக்கப்படும் என்பது உள்பட புதிய விதிமுறைகளை மத்திய அரசு கடந்த 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனால் சுற்றுலா வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன. புதிய விதிமுறைகளை ஒருவாரத்துக்குள் அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடந்த வாரம் உத்தரவிட்டனர்.

அதன்படி நாடு முழுவதும் உள்ள 41 புலிகள் சரணாலயங்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு நேற்று முன்தினம் அரசிதழில் வெளியிட்டது.
நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால
தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஆனைமலை, முதுமலை, பெரியார், களக்காடு-முண்டந்துறை ஆகிய
புலிகள் காப்பகங்கள் கேரளாவிலுள்ள பரம்பிக்குளம், கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 41 புலிகள் சரணாலயத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 3 மாதத்துக்கு மேலாக நீடிக்கப்பட்ட தடை விலகியுள்ளது.

சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் அதை நம்பிய டூரிஸ்ட் வாகனங்கள், விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா பயணிகளை நம்பி கடை வைத்துள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது தடை நீங்கியுள்ளதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். ஓரிரு நாளில் உரிய வழிகாட்டுதலுடன் சுற்றுலா தலங்கள் செயல்பாட்டிற்கு வரும் என்றனர்.

No comments:

Post a Comment