Wednesday, January 9, 2013

கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிகின்றன


வேதாரண்யம்,: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் சீசன் துவங்கியதையடுத்து வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. கடலின் மேற்பரப்பில் அவை இரை தேடும் காட்சி சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக அமைந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது கோடியக்கரை. இங்குள்ள பறவைகள் சரணாலயத்தில், பறவைகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை உள்ளது. இதனால், ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து தங்கி செல்வது வழக்கம்.

சுமார் 247 வகையான பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. தற்போது சீசன் துவங்கி உள்ளது. இதையடுத்து ரஷ்யா, ஈரான், ஈராக், ஐரோப்பிய நாடுகள், மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் குஜராத் மாநிலம் ராணாகஞ்ச் ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு வகைகளை சேர்ந்த 50 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. உள்ளான், கோடியக்கரைக்கு அழகு சேர்க்கும் பூநாரை, கடல் ஆலா, சிரவி, செங்கால் நாரை, கூழைக்கடா, கிரேட்டர் பிளமிங்கோ, லேசர் பிளமிங்கோ உள்ளிட்ட வகை பறவைகள் வந்து குவிந்துள்ளன.

கோவை தீவு, இரட்டை தீவு, தனக்கர் மடம், திருத்தலைக்காடு உள்ளிட்ட இடங்களில் கடல் பரப்பிலும், காடுகளிலும் வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக இரை தேடுவதை, இரை தேடி பறப்பதை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து மும்பையில் உள்ள பறவை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானி பாலச்சந்திரன் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளை விட இந்தாண்டு கூடுதலாக பறவைகள் வந்துள்ளன. அதேநேரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் வரை வந்த பறவைகள் தற்போது வருவதில்லை. பருவநிலை மாற்றம், உப்பளங்கள் விரிவாக்கம், மழை குறைவு போன்றவையே இதற்கு காரணம் என்றார்.

ரசிக்கும் நேரம்
கோடியக்கரை வனச்சரகர் வேதரத்தினம் கூறுகையில், காலை 6- 8, மாலை 4- 6 மணி வரை பறவைகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம். சுற்றுலா பயணிகளுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார். சில வகை பறவைகளை சுமார் 5 கி.மீ தூரம் வரை நடந்து சென்றுதான் பார்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் நடந்து சென்று பறவைகளை பார்த்து ரசித்து திரும்புகின்றனர்.

ஆனால், குழந்தைகளுடன் வருவோர் நடந்து சென்று பார்க்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எல்லோரும் ரசிக்கும் வகையில் கோடியக்கரையில் இருந்து முத்துப்பேட்டை வரை படகுகள் இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். நாகையில் இருந்து கோடியக்கரை 55 கி.மீ தூரத்தில் உள்ளது. நாகையில் இருந்து வேதாரண்யம் வழியாக கோடியக்கரைக்கு செல்லவேண்டும்.

No comments:

Post a Comment