Wednesday, January 9, 2013

புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை


 

நெல்லை, : களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், குரங்குகள் உடல் மெலிவுற்று வாடி வதங்கி காட்சியளிக்கின்றன. அவற்றை குற்றாலத்திற்கு இடப் பெயர்ச்சி செய்ய வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய விலங்கான புலிகளை காக்க, புலிகள் சரணாலயத்தின் உள்பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் இந்தியாவின் கடைக்கோடி புலிகள் சரணாலயமான நெல்லை மாவட்டம் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி களக்காடு புலிகள் காப்பகத்தில் செங்கல்தேரி, தலையணை, தேங்காய் உருளி, நம்பி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கும் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அகத்தியர் அருவி, பாபநாசம் அணை, சொரிமுத்தையனார் கோயில், பாணதீர்த்த அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட இடங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல முடியவில்லை.

ஓரிரு கோயில்களுக்கு மட்டும் பக்தர்கள் வெகுதூரம் நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புலிகள் காப்பக பகுதிகளில் முக்கிய உயிரினமான குரங்குகள் படும் பாடு சொல்லி மாளாது. வனப்பகுதிகளில் குரங்குகள் பெரும்பாலும் அங்கு காணப்படும் மா உள்ளிட்ட பழ வகைகளை தின்று உயிர் வாழும். களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்தையும் வறட்சி விட்டு வைக்கவில்லை. போதிய நீர் இல்லாததால் மரங்கள் வாடி விட்டன. இந்த காலக்கட்டங்களில் குரங்கினங்கள் உணவுக்கு சுற்றுலா பயணிகளை நம்பியே இருக்கும். சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வழங்கும் வாழை பழங்கள், மீதமுள்ள உணவு பண்டங்களை பாறையில் கொட்டி விட்டு செல்வதை தின்று பசியாறும். சுற்றுலா பயணிகள் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் முண்டந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குரங்குகள் மிகவும் மெலிந்து வருகின்றன. சுற்றுலா தலங்களை சுற்றி சுற்றி வந்து சுகவாழ்க்கை வாழ்ந்த குரங்குகள் இப்போது ஒருவேளை உணவுக்கே திண்டாடுகின்றன. உணவு கிடைக்காமல் சில குரங்குகள் சுகவீனம் அடைந்துள்ளன. இதனால் அவற்றை அங்கிருந்து அகற்ற வனத்துறை முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

குற்றாலத்துக்கு மாற்ற முடிவு
இதுகுறித்து புலிகள் காப்பக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டதால், புலிகள் காப்பக பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்டவை குரங்குகள்தான். உணவில்லாமல் வாடி வதங்கிய குரங்குகளை இங்கிருந்து பிடித்து குற்றாலம், வாசுதேவநல்லூர் தலையணை பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கூண்டுக்குள் வாழைபழங்களை வைத்து குரங்குகளை மொத்தமாக பிடித்து குற்றாலத்திற்கு மாற்றி வருகிறோம். 150 குரங்குகள் இங்கிருந்து மாற்றப்பட்டுள்ளன. குற்றாலம் அதை சார்ந்த மலைப்பகுதிகளில் குரங்குகளுக்கு போதிய உணவு கிடைக்கும். ஆனால் குரங்கினங்கள் தங்கள் கூட்டத்திற்கு ஒருவரை தலைவனாக கொண்டு செயல்படும். புதிய இடம் என்பதால் அதற்கேற்ப அவை பழகி கொள்ள சில நாட்கள் ஆகும் என்றார்.

No comments:

Post a Comment