Wednesday, January 9, 2013

வேலூரில் ஒரு சுற்றுலா


அமிர்தி: வேலூரில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவில் இயற்கை வனப்புடன் கூடிய பசுமையான வனப்பகுதியாக அமிர்தி அமைந்துள்ளது. இதில் ஒருபகுதி சுற்றுலா இடமாகவும், மறுபகுதி பூங்கா மற்றும் வன விலங்குகளுடன் கூடிய வன சரணாலயமாகவும் உள்ளது. பருவ காலங்களில் இங்குள்ள சிற்றோடை மற்றும் நீர்வீழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

இங்குள்ள பூங்கா குழந்தைகள் விளையாடி பொழுதை போக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா பயணிகள் இளைப்பாறிச் செல்லும் வகையில் மஞ்சம்புற்களால் வேயப்பட்ட குடில்களும் உள்ளன. வன சரணாலயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இங்கு விதவிதமான பறவைகள், விலங்கினங்கள், முதலைகள், பாம்புகள், மயில்கள் உள்ளன. மான்களையும் பார்த்து பரசவப்படலாம்.
விடுமுறை தினங்களில் அமிர்திக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அடர்ந்து வளர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் சந்தனமரங்களும் உள்ளன. இதமான சீதோஷ்ண நிலையுடன் கூடிய அமிர்திக்கு செல்ல வேலூரில் இருந்து பஸ் வசதி உள்ளது.


வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில்:
வேலூரில் சுமார் 10 கி.மீ.தூரத்தில் உள்ளது ஸ்ரீபுரம் பொற்கோயில். ஸ்ரீசக்கர நடைபாதையின் நடுவே மகாலட்சுமிக்காக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
100 ஏக்கர் பரப்பளவில் 55 ஆயிரம் சதுரஅடி அளவில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பொற்கொல்லர்களும், செப்பு வேலை செய்பவர்களும் 6 ஆண்டுகளாக உழைத்து கோயிலை வடிவமைத்துள்ளனர். ரூ.600 கோடி செலவிடப்பட்டுள்ளது.

வேலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் இருந்து தொடர்ச்சியாக ஸ்ரீபுரத்துக்கு பஸ் வசதி உள்ளது. சென்னை, பெங்களூர், திருப்பதி போன்ற இடங்களில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. பகல் பொழுதில் வெயிலிலும், இரவில் விளக்கு ஒளியிலும் ஜொலிக்கும் காட்சியை காண வேண்டும் என்பதற்காக மாலை நேரங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருகின்றனர். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்தும் ஸ்ரீபுரத்துக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. காட்பாடி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ஸ்ரீபுரம் செல்லவும் பஸ் வசதி உள்ளது.

ஏலகிரிமலை
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரிமலை வேலூரில் இருந்து 91 கி.மீ. தொலைவில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் கோடைவிழா நடைபெற்று வருகிறது. இங்குள்ள புங்கனூர் ஏரி, படகு சவாரி, பூங்கா, மலையேற்ற வழித்தடங்கள், வேலவன் கோயில், மூலிகை பண்ணை, தொலைநோக்கு மையம், நேச்சுரல்பார்க், இசைநீரூற்று, இயற்கை எழில்மிகுந்த மலைப்பகுதி போன்றவை பொழுதுபோக்கு அம்சங்களாக விளங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகளுக்காக யாத்ரிநிவாஸ் விடுதி கட்டப்பட்டுள்ளது. படகுசவாரி செல்ல சிறுவர்களுக்கு ரூ.15ம், பெரியவர்களுக்கு ரூ.30ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment