Wednesday, January 9, 2013

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் மழைபெய்வதை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை, கபினி அணை உள்பட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் கர்நாடக அணை பகுதிகளில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வரத் தொடங்கியது. காவிரி ஆற்றில் சுமார் 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர தொடங்கியது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கினர்.

இதனால் ஒகேனக்கல் பகுதிகளில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிலிகுண்டுலு பகுதிகளில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர்.

அவர்கள் ஒகேனக்கல்லில் சினி பால்ஸ், ஐந்தருவி, பெரிய அருவி உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து அருவிகளில் குளித்தும், படகில் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் நுங்கும் நுரையுடன் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

No comments:

Post a Comment