Wednesday, January 9, 2013

டாப்சிலிப், பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை


வால்பாறை,: உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப், பஞ்சலிங்க அருவி, குரங்கு அருவி, வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய விலங்கான புலிகளை காக்க, இந்தியாவில் பல்வேறு இடங்களில் புலிகள் சரணாலயங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் பல, சுற்றுலா தலங்களாக இருந்த பகுதிகள். எனினும் நாட்டில் உள்ள அனைத்து புலிகள் சரணாலயங்களும் வழக்கம் போல் சுற்றுலா நடவடிக்கைகள் தொடர்ந்தன.

இந்நிலையில் புலிகள் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் புலிகள் சரணாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட வர்த்தக மையங்களை அகற்ற வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
அதை தொடர்ந்து, புலிகள் சரணாலயத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக 3 வாரத்திற்குள் நிர்ணயம் செய்யும்படி உச்சநீதிமன்றம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு உத்தரவிட்டது. இந்த கெடு முடிந்தும் அமல்படுத்தாததால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேற்று ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரை புலிகள் சரணாலயத்தின் உட்பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள் எதையும் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவால் கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில் வால்பாறையிலுள்ள சின்னக்கல்லார் அருவி, மானாம்பள்ளி மீன்பாறை ஆறு, நல்லமுடி காட்சிமுனை, கீழ் நீரார் அணை, மேல்நீரார் அணை மற்றும் ஆழியார் - வால்பாறை மலைப்பாதையில் உள்ள குரங்கு அருவி, 9வது கொண்டை ஊசி வளைவு, பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்சிலிப் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி, மூணாறு ரோட்டிலுள்ள சின்னாறு, கோடந்தூர் அம்மன் கோயில், சீனிவாச பெருமாள் கோவில் ஆகிய இடங்களுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. டாப்சிலிப்பில் யானைகள் சவாரியும் நடைபெறாது.

No comments:

Post a Comment