அருள்... பொருள்... இன்பம்... 8
கடந்த வாரத்தில் ஒருநாள் ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். அது என் மூதாதையர்கள் வாழ்ந்த ஊர். பெரிய கோயில் எனப்படும் ரங்கநாத பெருமாளின் திருக்கோயில் உள்ள ஊர். ஸ்ரீரங்கத்தின் இன்னொரு சிறப்பு காவிரி! குடகில் பிறந்த காவிரி இங்கேதான் மாலைபோல இரண்டு கீறாக பிரிந்து ஓடுகிறது. அதனால் இதன் இரு கீறுகளுக்கு நடுவில் ஒரு தீவு உருவானது. அபூர்வமான இந்தத் தீவில்தான் மிக அபூர்வமான ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த காவிரி நீரால்தான் ரங்கநாதர் தினமும் அபிஷேகிக்கப்படுகிறார். கோயில் யானை மீது அதற்கான நீர் கொண்டு செல்லப்படும் காட்சியே ஒரு தனி அழகுதான்!
இந்த காவிரியை ஆடி மாதத்தில் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். நொப்பும் நுரையுமாக பிரவாகமாக பாய்ந்து செல்வாள்.
இன்று நேற்றல்ல, கால காலமாய் இதுதான் நிலை. வரலாற்றுக் காலம் என்றால்கூட ஒரு கணக்குப் போட்டு இத்தனை ஆண்டுகள் என்று சொல்லிவிட முடியும்; புராண காலம் எனும்போது அதை அளவிடுதல் சாத்யமில்லை. இப்படி ஒரு நெடிய புராணம் மற்றும் வரலாற்றுத் தொடர்புடைய காவிரியை இம்முறை நான் ஸ்ரீரங்கத்தில் பார்த்தபோது விக்கித்துப் போனேன். இளைத்துத் துரும்பாய் ஒரு நோயாளிபோல இருந்தது. மனம் கலங்கி விட்டது. எதனால் இப்படி என்று சொல்லத் தேவையே இல்லை. நிர்வாக வசதிக்காக சர்தார் வல்லபாய் படேல் தென் பாரதத்தை கர்நாடகம், தமிழகம், கேரளம், ஆந்திரம் என்று பிரித்தார். இது பிரிவினை அல்ல. ஒரு வீட்டுக்குள் சமையலறை, படுக்கை அறை என்று வகுத்துக் கட்டுவது எப்படி பிரிப்பதாக ஆகும்?
ஆனால் இது புரியாமல் அந்த அறைகளுக்குள் இருப்பவர்கள் அடித்துக் கொண்டால் எப்படி இருக்கும்? இந்த அசட்டுச் சண்டை ஒரு முடிவேயில்லாமல் நீண்டு கொண்டு செல்வதுதான் கொடுமையிலும் கொடுமை. இந்தப் பிரச்னையில் பிரதானமான ஒரே விஷயம் எங்களுக்கு நீர் இல்லாதபோது உங்களுக்கு எப்படி தரமுடியும் என்பதுதான். வானம் பொய்த்துப் போகும்போதெல்லாம் இப்படி ஒரு சச்சரவு ஏற்படுவதும் அதைக்கண்டு நாம் வருத்தமடைவதும் வழக்கமாகி விட்டது.
உண்மையில் சரியான தீர்வு என்பது, இருப்பதை சரி பாதியாகப் பகிர்ந்துகொள்வதுதான்! எனக்கும் இங்கே இல்லாததால்தானே கேட்கிறேன் என்று நாம் எவ்வளவுதான் சொன்னாலும் கண்ணீர் விட்டுக் கதறினாலும் அதனால் ஒரு புண்ணியமுமில்லை. ஒரு சொட்டுத் தண்ணீர்கூட தரமாட்டோம் என்று அங்குள்ள
தலைவர்களே பேசுவதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.
காவிரி, குடகில் தொடங்கி பூம்புகாரில் முடிகிறது. அதன் நெடிய உடல் அதிகம் படுத்திருப்பது தமிழகத்தில்தான். ஒரு ஆறு என்பது அது பாயும் பகுதிகள் அனைத்துக்கும் சொந்தம் என்பதுதான் உலகப் பொது நியாயம். இதெல்லாம் தெரியாதவர்கள் அல்ல அவர்களும். இருந்தும் அடம் பிடிக்கிறார்கள். இதனால் கர்நாடகமும் தமிழகமும் எதிரிகள் போல பார்க்கப்படும் கொடுமையும் மாநில எல்லைப்புறத்தில் சதா பதட்டமும் நிலவுவதும் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
இவர்களைப் பார்த்து இங்கேயும் ஒரு கூக்குரல்: ‘நெய்வேலி என் மண்ணுக்குள் உள்ளது. அதன் மின்சாரத்தை நானும் உனக்கு தரமாட்டேன்.’ இது தொடர்ந்தால் ஒரு கன்னடனும் தமிழகத்தில் வாழ முடியாது. ஒரு தமிழனும் கர்நாடகத்தில் வாழ முடியாது. அங்கு விளையும் அரிசிக்கு இங்கு மார்க்கெட் இருக்காது. இங்கு விளையும் பொருளுக்கு அங்கு மார்க்கெட் இருக்காது.
மிகக் கொடுமையான விஷயம் இந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இதில் மீறி விட்டார்கள் என்பதுதான். உச்சநீதி மன்றமே செயலிழந்தால் பிறகு எங்குதான் போவது? இது மிக மிக மோசமான முன்னுதாரணம்.தலை இருப்பதால் ஒருவரை தலைவன் என்று அழைப்பதில்லை. தலையான செயலை யாராலும் செய்ய முடியாததை செய்பவனை, தலைமுறைகளை காப்பாற்றுகின்றவனை, வழி நடத்துகின்றவனைத்தான் தலைவன் என்கிறோம். அப்படி காப்பாற்றுகின்ற, வழிநடத்துகின்ற பொறுப்பில் இருப்பவர்களே பகிர்ந்துண்ண விரும்பாமல் எங்களுக்கு போகத்தான் மிச்சம் என்பதுபோல நடந்துகொள்வது எதிர்காலத்துக்குத் துளியும் நல்லதல்ல. ‘ஒருவர் உன்னிடம் யாசகம் கேட்கும்போது நீ எதை வேண்டுமானாலும் இல்லை என்று கூறு; ஆனால் தண்ணீரையும் உப்பையும் மட்டும் இல்லை என்று சொல்லாதே’ என்கிறது சாஸ்திரம். இதனால்தான் ‘தண்ணீர் பந்தல்’ வைப்பது என்கிற ஒரு செயல்பாடே தோன்றியது.
இன்றும் பலரது வீடுகளின் திண்ணையில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு பானை வைத்து அதில் தண்ணீர் நிரப்பியிருப்பார்கள். இந்த தண்ணீர், மனிதனுக்கு மட்டுமல்ல பறவைகள், மிருகங்களுக்கும் சேர்ந்ததுதான். எனவே மாடிகளில் அவைகளுக்கென தண்ணீர் வைப்பதும் பெரும் தர்மச்செயலாக பார்க்கப்படுகிறது. அரச நீதியில்கூட ஒருவரை கடுமையாக தண்டிக்க நேரும்போது, ‘ஒரு குவளை நீர் கூடத் தரக்கூடாது’ என்பதே பெரும் தண்டனையாக கருதப்படுகிறது.
மனதில் ஈரம் இல்லாமல் போகும்போது கருணை போய்விடும். கருணை போன இடத்தில் குரூரம் துளிர் விடும். இதனால் தர்மம் பாதிக்கப்படும். விளைவாக வானம் வறண்டு மழை இல்லாமல் போகும். அன்றும் இன்றும் அரசாள்பவர்களுக்கான தகுதிச் சான்றிதழை வானம்தான் மழை வடிவில் தந்து உறுதி செய்கிறது.
இது மூடக் கருத்தல்ல - காலம் காலமாக மண்ணில் நிலவி வரும் நம்பிக்கை. இன்று தண்ணீர் போதாமல் அடித்துக் கொள்ள காரணமும் மழையின்மைதான்!
இந்த மழை தவறாமல் பொழிய வேண்டும் என்றால் இருதரப்பிலும் ஏற்பட வேண்டியது கருணை மிகுந்த அணுகுமுறைதான். கர்நாடகத்துக்கே தண்ணீர் பற்றாத ஒரு நிலை இருந்தும் நம் மண்ணில் உள்ளவர்கள் தவிப்பைப் பார்த்து அங்குள்ள தலைவர்கள், ‘இருப்பதில் பாதியை தருவோம்; பகிர்ந்து உண்போம்’ என்று சொல்லி தண்ணீர் திறந்து விடுவார்கள் என்றால், அதுதான் சிறப்பு. அதாவது இருப்பவன் தருவதைவிட இல்லாதவன் தருவதுதானே சிறப்பு? தமிழக மக்களும் கர்நாடகத்தை கண்கள் பனிக்க நெகிழ்வோடு பார்த்து கை கூப்புவார்கள். ஒரு சிலர் அங்கே இதை கண்டித்து, ‘தனக்கு போகத்தாம்ப்பா தானம்’ என்று குரலெழுப்பினாலும் அவர்களை ‘பேசாமல் இரு’ என்று அடக்கிவைப்பார்களேயானால், அது மேலும் சிறப்பு. இவ்வேளையில் மகாபாரதத்தில் தர்மர் தொடர்பாக ஒரு காட்சியும் என் நினைவுக்கு வருகிறது.
அது ஒரு மாயப் பொய்கை. அதில் நீர் அருந்துபவர்கள் இறந்து விடுவார்கள். பஞ்ச பாண்டவர்களில் அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரும் அதில் நீர் அருந்தி மாண்டு கிடக்க, இறுதியாக தர்மபுத்திரர் வந்து தன் சகோதரர்களின் நிலைகண்டு பேதலிக்கிறார். பொய்கையில்தான் சிக்கல் என்பது புரிகிறது. அவர் ஊகத்திற்கு ஏற்ப மாயப் பொய்கையை காவல் காக்கும் பூதம் அவர்முன் தோன்றுகிறது. அதனிடம் தன் சகோதரர்களின் உயிரை மீட்டுத்தருமாறு கோருகிறார். தன் கேள்விக்கு சரியான பதிலை தருமர் சொன்னால் நால்வரில் இருவர் உயிரைத் திரும்பத் தருவதாகச் சொல்கிறது பூதம். தர்மபுத்திரரும் சரியான பதிலைக் கூற, ‘‘இந்த நால்வரில் எந்த இருவர் உயிரை உனக்கு நான் திரும்பத் தரவேண்டும்?’’ என்று கேட்கிறது பூதம். தர்ம புத்திரர் கொஞ்சமும் யோசிக்காமல் நகுலன், சகாதேவன் உயிரைக் கேட்கிறார். ‘‘ஏன்?’’ என்று கேட்கிறது பூதம்.
‘‘பீமன், அர்ஜுனன், நான் மூவரும் குந்தி தேவிக்குப் பிறந்தவர்கள். நகுலன், சகாதேவன் இருவரும் எங்கள் சிற்றன்னை, மாத்திராதேவிக்குப் பிறந்தவர்கள். குந்தி தேவியாருக்கு நானிருக்கிறேன்; என் சிற்றன்னைக்கு இவர்கள் இருக்கட்டும் என்றே அவ்வாறு கேட்டேன்’’ என்கிறார், தர்மபுத்திரர். அவரது தர்ம சிந்தனையை மெச்சி பூதம் நான்கு உயிரையும் திருப்பித் தந்ததாம்.
இந்திரா சௌந்தர்ராஜன்
No comments:
Post a Comment