Wednesday, January 2, 2013

இது ஒரு கார்காலம்


அருள்... பொருள்... இன்பம்... 11

இது கார் காலம் என்று மழைக்காலத்தை இலக்கிய நயத்தோடு சொல்வார்கள். அதுவும் குறிப்பிட்ட காலம்தான் கார்காலம். அதன்பின் வேனில், வசந் தம், கோடை, குளிர் என்று காலங்கள் மாறிக்கொண்டே போகின்றன. ஆனால் இப்போது நம்வரையில் கார்களின் காலம் என்று ஒன்று தொடங்கி எனக்கு பருவங்களெல்லாம் கிடையாது, வருடம் முழுவதுமே என் காலம் என்பதுபோல நடந்து கொண்டிருக்கிறது.

எந்த நாளிதழைத் திறந்தாலும் கார்களின் விளம்பரம் இல்லாத நாளில்லை. ஏராளமான மாடல்கள், வண்ணங்கள்! எங்கள் காரைப்போல ஒரு காரை எங்கேயும் பார்க்க முடியாது என்று இவர்களுக்கு இடையே போட்டி வேறு. இந்த கார்களை ஒரே தவணையில் வாங்க பணம் இல்லாவிட்டால் பாதகமில்லை; அதற்கென தவணைமுறைகளுடன் தருவதற்கு போட்டி போடும் வங்கிகள் என்று கார்களின் கும்மாளம் ஓவராகவே உள்ளது. இன்று காரில் போவது அந்தஸ்தின் ஒரு அம்சமாக ஆகிவிட்டது. ‘கடன் வாங்கியாவது கார் வாங்கி விடு’ என்பது ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்கிற பழமொழிக்கு இணையாகி விட்டது. கார்களுக்கு ஒருபடி மேலாக டூவீலர் எனப்படும் மோட்டார் சைக்கிளின் விளம்பரங்களும் விற்பனையும் கன ஜோராக நடந்து வருகிறது. இங்கேயும் முழுசாக பணம் தர வக்கு வகை பற்றி எல்லாம் கவலையே இல்லை. கடன்தரத் தயாராக இருக்கின்றன, வங்கிகள்!

இத்தனைக்கும் உலகிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம். இப்போது இருக்கும் விலைகூட ஜுஜுபி! லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தொடும் நாள் தூரத்தில் இல்லை. இந்த விலை விற்கும்போதே இப்படி ஒரு விற்பனை என்பதை ஒரு கோணத்தில் வளர்ச்சி என்று எடுத் துக் கொண்டாலும் பல கோணங்களில் இந்த போக்கு எனக்குள் பயத்தையே ஏற்படுத்துகிறது. நானும் காரும் டூவீலரும் வைத்திருக்கிறேன். இதில் என் கார் எனக்கு அளித்துள்ள ஞானத்தை சொன்னால் சிரிப்புதான் வரும். சுளையாக ஐந்தரை லட்சம் கொடுத்து வாங்கிய அது, என் வீட்டு போர்டி கோவில் எப்போதும் ஒரு கும்பகர்ணத் தூக்கத்தில்தான் கிடக்கிறது. ‘‘ஏங்க ஓட்டத் துப்பில்லையா?’’ என்று கிண்டலாகக் கேட்டால் அதுதான் உண்மை.

இன்றைய நெருக்கடியில் காரை ஓட்டியபடி எங்கேயும் சென்றுவர முடியவில்லை. எங்காவது போனால் நிறுத்த எங்கே இருக்கிறது இடம்? கார் நிறுத்துவதற்கு என்று ஒதுக்கப்பட்ட சில இடங்களில் எல்லாம் ஏற்கெனவே கார்கள் நின்றிருக்கின்றன! வேறு வழியின்றி சாலை ஓரமாக எங்காவது, எப்படியாவது நிறுத்திவிட முயன்றால் அங்கேயும் நம்மைப் போலவே ஒருவர் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி நிற்கிறார். அவரையும் மீறிக்கொண்டு ஒரு இடத்தை கண்டுபிடித்தால் அங்கே அந்த இடத்துக்குரியவர், ‘‘இப்படி போற வழில நிறுத்தினா எப்படிங்க?’’ என்று கேட்டுக்கொண்டே ஆவேசப் பிரவேசம் செய்கிறார். இந்தச் சிக்கல்களை ஒரு மனிதனால் எத்தனை தடவைதான் சந்திக்க முடியும்? வேறு வழியே தெரியாமல் நான் காரை எடுப்பதையே நிறுத்தி விட்டேன்.

என் நிலையில்தான் பலர் உள்ளனர். சிலர் டிரைவர் வைத்துக்கொண்டு அன்றாட பயன்பாட்டில் இருக்கின்றனர். ஆனால் பாவம் அந்த டிரைவர். எங்கே போனாலும் முதலாளி இறங்கிக்கொண்டுவிட அவர் பார்க்கிங் செய்ய படும்பாடு சொல்லி மாளாது. இதில் இல்லாத இடத்துக்கு பார்க்கிங் சார்ஜ் என்று நடக்கும் அடாவடிக் கொடுமை வேறு! எங்காவது அதிசயமாக இடம் இருந்து அங்கே காரை நிறுத்திவிட்டு இறங்கிப் போக முயற்சிக் கும்போது ஒரு பட்டாபட்டி இன்ட்ராயர் வெளித்தெரிய நடிகர் ராஜ்கிரண் கணக்காய் ஒருவர் ஒரு பிளாஸ்டிக் கைப்பையோடு எதிரில் வருவார். நம் முக த்தைக்கூட பார்க்காது ‘‘பத்து ரூவாய எடு’’ என்று ஒரு துண்டுச்சீட்டை கிழித்து நீட்டுவார். அதில் அச்சடித்த தொகைக்கு மேல் பத்து ரூபாயை இவ ராக ரப்பர் ஸ்டாம்ப் செய்திருப்பார்.

கேட்டால், ‘‘லட்சக்கணக்குல பணம் கட்டி ஏலம் எடுத்ருக்கோம்ல?’’ என்பார். நாம் இவர் வீட்டு முன்னால் சென்று நின்று கெஞ்சிக்கூத்தாடியதால் இவர் ஏலம் எடுத்ததுபோல ஒரு பாவனை காட்டுவார். பத்து ரூபாய் என்பது இம்மட்டில் மிகக் குறைவு. சமீபத்தில் சென்னையில் திரை அரங்குகளோடு கூடிய ஓர் அங்காடியில் மணிக்கு முப்பது ரூபாய். அதற்கு மேல் ஒரு நிமிடம் ஆனாலும் அடுத்த முப்பது... கேட்டால், ‘‘மிஷின்ல செட் பண்ணிட் டாங்க சார். அது பில் போட்ரும்; ஒண்ணும் பண்ண முடியாது’’ என்கிற எகத்தாளமான பதில். அன்று நான் நூற்றி இருபது ரூபாயை அழுதேன். ஆனால் என்னைச் சுற்றி இருந்தவர்கள் பணத்தை அள்ளி எறிந்துவிட்டுப் போய்க்கொண்டே இருந்தார்கள். சிலர் என்னை பிசினாறி என்பதுபோல பார்த்தனர்.

என் அலுவலகப் பணியில் எனக்கான வருடாந்திர இன்க்ரிமென்ட முப்பது ரூபாயோ, நாற்பது ரூபாயோ! ஐ.டி. கம்பெனிகள் வந்து அம்பதாயிரம், அறு பதாயிரம் சம்பளமெல்லாம் இன்றுதான். ஐநூறு, ஆயிரம் என்று படிப்படியாக வளர்ந்தது தான் என் காலம். ‘அதான் இந்தப் புலம்பு புலம்பறீங்க.’ என்று உடனே இதற்கொரு பதிலைக் கூறிவிடுவது சுலபம். ஆனால் இது எதுவுமே வளர்ச்சியோடு சேர்ந்ததே இல்லை. அவ்வளவும் சுரண்டல்கள்! அநியாயச் சுரண்டல்கள்! காரும் பைக்கும் வைத்திருப்பதற்கான அபராதங்கள். ஒன்று, புதிய நகரங்கள் தோன்ற வேண்டும்; அல்லது இருக்கும் சாலைகளையாவது ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட வேண்டும். பார்க்கிங் விஷயத்தில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். சென்னையில் இருந்து டெல்லிக்கு, அதாவது ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலை வுக்கு விமானப் பயணம் 3 மணி நேரம்தான்;

அங்கேயிருந்து வீட்டுக்கு சில கிலோ மீட்டர் தொலைவுக்கும் காரில் இதே மூன்று மணி நேரம்தான். மொத்தத்தில் வாகனங்கள் - வாங்கியதானாலும் சரி, வாடகைக்கு வந்தாலும் சரி கனங்களாக மட்டுமே ஆகிவிட்டன. அதன் சாரதிகளாக உள்ள நாமும் மனச்சகதியோடுதான் இருக்கிறோம். ‘சாரதிகளாக’ என்னும்போது கிருஷ்ண பரமாத்மாவின் நினைப்புதான் முதலில் வருகிறது. அவர்தானே இந்த உலகின் முதல் சாரதி? பாரதப்போரில் அர்ஜுனனின் தேருக்கு சாரதியாக முன்னாலே அமர்ந்துகொண்டு அர்ஜுனனைக் காப்பாற்றியது கண்ணனின் புத்திசாலித்தனம்தானே? கர்ணன் நாகாஸ்த்திரத்தை எடுத்து விட்டான். கர்ணனின் சாரதி சல்லியன், அர்ஜுனனின் மார்புக்கு குறி வைக்க யோசனை சொல்ல, கர்ணன் அதை ஏற்காமல் முகத்துக்கு குறி வைக்கிறான். அஸ்திரமும் வில்லிலே இருந்து புறப்பட்டு விட்டது.

கண்ணபிரானுக்கும் கர்ணனின் மனம் தெரியும். அந்த நொடி தன் காலால் ரதத்தை அழுத்த அது ஒரு சாணுக்கு தரையில் உடனே இறங்கிட முக த்தை நோக்கி வந்த நாகாஸ்திரம் அர்ஜுனனின் சிரசின்மேல் இருந்த கிரீடத்தை தாக்கி அப்படியே தூக்கிச் செல்கிறது. அர்ஜுனன் கண்ணனால் தப் பிக்கிறான். கர்ணனோ சல்லியன் பேச்சைக் கேட்காததால் தோற்கிறான். வீரத்தைவிட விவேகம் பெரியது என்பதோடு சாரதிகள் சரியாக அமைந்துவிட்டால் தோல்விக்கு இடமில்லை என்பதும் இதில் இருந்து புரிகிறது. அதுசரி, நிறுத்த இடமே இல்லாத ஊரில் கிருஷ்ண பரமாத்மாவே இன்று சாரதியாக வந்தாலும் என்ன புண்ணியம்?

No comments:

Post a Comment