Wednesday, January 2, 2013

ஆன்மிக அலமாரி


பன்னிருவருள் தலை மாணவர்

கச்சியப்ப முனிவர் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திருத்தணியில் சைவ வேளாளர் குலத்தில் அபிஷிக்தர் மரபில் தோன்றினார். பெற்றோர் பெயர் தெரியவில்லை. இளமைப்பருவம் இனிதே கழிந்தது. பிறகு கச்சியப்பர் தலயாத்திரை புறப்பட்டுத் தொண்டை சோழ நாட்டுத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்தார். அது பன்னிரண்டாவது பட்டம் அருள்திரு திருச்சிற்றம்பல தேசிகர் பெரிய பட்டத்திலும் தவத்திரு அம்பலவாண தேசிகர் சின்னப் பட்டத்திலும் எழுந்தருளியிருந்த காலம். ஆதீனத்தை அடைந்த கச்சியப்பர் ஸ்ரீலஸ்ரீ பஞ்சாக்கர தேசிகரின் குரு மூர்த்தத்தை வழிபட்டுச் சின்னப்பட்டம் தேசிகரைத் தரிசித்து வணங்கினார்.

அப்போதே கச்சியப்பர் சின்னப்பட்டத்தின் திருவருள் நோக்கத்திற்கு இலக்கு ஆனார். அந்தத் தேசிகரிடத்தே சமய தீட்சை, விசேஷ தீட்சை, துறவறம், நிர்வாண தீட்சை ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டார். இந்தச் சமயத்தில் கச்சியப்பர் சிவஞான போத மாபாடியக் கருத்தரும், பல்கலைப் பெருங்கடலும் ஆகிய மாதவச் சிவஞான யோகிகளின்பால் பல தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் மெய்கண்ட சாத்திரங்கள், பண்டார சாத்திரங்கள் ஆகிய இருபத்தெட்டையும் மேலும் பற்பலவற்றையும் கற்று, யோகிகளின் மாணவர் பன்னிருவருள் தலை மாணவராகத் திகழ்ந்தார்.

சைவ இலக்கிய உலகில் கச்சியப்ப முனிவரைச் சிவஞான யோகிகளின் மாணவராகச் சொல்லப்பட்டு வந்தாலும் வேறொரு கருத்தும் நிலவி வந்தது. அஃதாவது ஒரு சாரார் முனிவரை யோகிகளின் மாணவராக அன்றி ஒரு சாலை மாணவராகக் கருதி வந்தனர். மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களும் அவர்களுள் ஒருவர். அருள்திரு கச்சியப்ப முனிவர் அருளிய பூவாளூர்ப் புராணம் (மூலமும் - உரையும்), சித்தாந்தச் செல்வர், வித்துவான் க.கதிரேசன், பக்: 348, ரூ. 150/-, சரஸ்வதி மகால் நூல் நிலையம், திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை-609803. செல்போன்: 9487713042.

அன்பர்களுக்கான அருள்மொழி

கணபதி முனிவருக்கு உபதேசம் செய்ததால் பகவான் ரமண மகரிஷி அவர்கள் புகழ் திக்கெட்டும் பரவியது. கணபதி முனியின் கேள்விக்கு ரமணர் சொன்னார்: ‘‘நான் என்பது எங்கே இருந்து புறப்படுகிறதோ, அதை கவனித்தால் மனம் அங்கே அடங்கும். அதுவே தவம்! ஒரு மந்திரத்தை மீண்டும் மீண்டும் கூறும்போது, மந்திர ஒலி எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால், மனம் அங்கே அடங்கும். அதுவே தவம். நான் என்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பின்னரே மற்ற நினைவுகளும் எழுகின்றன.’’

அதற்கு ரமணர் சொன்ன எடுத்துக்காட்டு சிறப்பானது: வெட்டியான் எரிக்கும்போது தசைகள் இழுபட்டு, பிணம் எழும்போது அவன் தடியால் அப்பிணத்தை ஓங்கி அடிக்கிறான். உடல் எரியும்வரை இது தொடர்கிறது. கடைசியில் உடல் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிறது. தடிக்கு வேலை இல்லை என்று வெட்டியான் அதை தீயிலேயே போட்டு விடுகிறான். அந்த வெட்டியானைப் போல் நாம்!

ஆத்ம விசாரணை எனும் தீயில் வேகும் பிணம்தான் ‘மனம்!’ எழ எத்தனிக்கும் பிணத்தை அடிக்கும் ‘தடி’யாக ‘‘நான் யார்?’’ என்ற கேள்வி. இறுதியில் தடி எரிந்து முடியும்போது ஆத்ம தரிசனம் கிடைக்கிறது. ஒரு மகானின் அவதாரம், கே.எஸ்.ரமணா, பக்: 104, ரூ. 80/-, ரமணா பதிப்பகம், விக்னேஸ்வராலயா, 2/1, என்.ஜி.ஓ.நகர், சின்ன திருப்பதி, சேலம்-636008. தொலைபேசி: 0427-2412670, செல்: 9443266744.

மாடுகளைக் காத்த மாடன்கள்

தெய்வமாக கருதும் ஆநிறையை காப்பது தங்களது முழுமுதற்கடன் என அக்கால மன்னர்களும் மக்களும் கருதினர். பகைவர் நாட்டு பசுக்கூட்டங்களை போருக்கு முன்னர் அரசர்கள் கவர்ந்து வருவார்கள். பசுக்களை கவரச் செல்லும் வீர மறவர்கள் ‘வெட்சி’ எனும் பூவை அணிந்து செல்வதாகவும் தங்கள் நாட்டு பசுக்களை மாற்றார் கவராமல் தடுக்க போர் புரியும் வீரர்கள் ‘கரந்தை’ எனும் பூவை சூடிச் செல்வதாகவும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.கவரும்போதும், கவருவதை தடுக்கும்போதும் அங்கே பெரும்போர் உருவாகி ஆற்றலுடைய மறவர்கள் பலர் விழுப்புண் பட்டு வீர மரணம் அடைவர். இவர்களை ‘தொறுமீட்டுப் பட்டான்’ என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. தொறு என்பது பசுவை குறிக்கும்.

இவ்வாறு வீர மரணம் எய்திய வீரர்களின் நினைவிடங்கள் ‘மாடன்கள்’ என நாட்டுப்புற மக்களால் அழைக்கப்பட்டது. மாடன் என்ற வார்த்தைக்கு மாடுகளை காப்பவன், மேய்ப்பவன் என பொருள் கொள்ளலாம். கிராமத்தில் ஊரார் மாடுகளை மேய்ப்பவரை ‘மாடக்கோன்’ என்று அழைப்பார்கள். மாடன் என்ற தெய்வம் மாடுகளோடு சம்பந்தப்பட்டது என்பதற்கு தொழு மாடன். காளை மாடன் என்ற பெயர்களைச் சான்றாக கொள்வதோடு சில மாடன் கோயில்களில் மாட்டுத்தலையோடு மனித உருவத்தில் தளவாய் மாடசாமி என்ற தெய்வம் இருப்பதை இன்றும் அறியலாம். எனவே மாடுகளுக்காக உயிர் நீத்தவனை மாடன் என்று அழைக்கலானார்கள் என்று கூறப்படுகிறது. தெய்வ தரிசனம், இசக்கி, பக்: 128, ரூ. 50/-, தென்றல் நிலையம், 12-பி, மேலசன்னதி, சிதம்பரம்-608001. தொலைபேசி: 04144-230069.

பித்ருக்களும் தீபாவளியும்

ஐப்பசி மாத சதுர்த்தசி அன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளித் திருநாள் முன்னோர்கள் வழிபாட்டிற்கும் ஏற்ற நாளாகும். பித்ருக்களை வழிபடுவதால், நமது பாவங்கள் தொலைவதுடன், நமது குலத்தில் குழந்தைகள் பிறந்து குடும்பம் செழிப்படையும் என்று புராணங்கள் கூறுகின்றன. பித்ரு வழிபாட்டை வலியுறுத்தும் புராணக் கதையை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். கிருத யுகத்தில் ஒரு முனிவரின் மனைவிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் பிறந்த குழந்தையைத் தன கண்களால் பார்ப்பதற்கு முன்பே அந்த தாய் இறந்துவிட்டார். இதன் காரணமாக தாயில்லாப் பிள்ளையைச் சீரோடும், சிறப்போடும் தந்தையான அந்த முனிவர் வளர்த்து வந்தார். இதனால் அவர் மறுமணமும் செய்துகொள்ளவில்லை. காலங்கள் உருண்டோடின.

முனிவரும் வயதாகி இறந்துவிட்டார். அனாதையான அந்த மகனுக்குக் கோபம் வந்து எமனையும் எமலோகத்தையும் அழிக்கும் நோக்கத்துடன் கடும் தவம் புரிந்தான். அனாதை மகனின் தவம், எமனின் தந்தையான சூரிய பகவானைத் தாக்கியது. எனவே சூரிய பகவான், அவன் கண் முன்னே தோன்றி மனிதராகப் பிறந்தால் இறப்பது நிச்சயம் இதுவே உலகத்தின் விதி என்று கூறினார். ஆனால் அதனை மறுத்த மகன் சூரியனுக்கும் எமனுக்கும் சாபம் கொடுப்பதற்காக மீண்டும் கடும் தவம் புரிந்தான். அப்போது பித்ரு லோகத்தில் உள்ள பித்ரு தேவதைகள், அவன் முன் தோன்றி கோபத்தைக் கைவிடும்படி வேண்டினர். ஆனால் அந்த மகனுக்கு அப்போதும் கோபம் குறையவில்லை.

கடைசியாக உன் தந்தையை ஒரே ஒருமுறை உன் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறோம் எனக் கூறியவுடன் அவன் கோபம் தணிந்தது. பித்ரு லோகத்தில் இருந்து அந்த முனிவர், மகன் முன் தோன்றினார். பித்ரு லோகத்திற்குச் சென்றவர்கள், மீண்டும் பூலோகத்திற்கு வரமுடியாது என்பதை தந்தையான முனிவர் எடுத்துக் கூறி உனக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். மண்ணை விட்டுப் போனாலும் நம்மை மட்டும் மறப்பதில்லை (பித்ரு பூஜையும் அதன் பலன்களும்), டாக்டர். திருச்சி. ஜெகபாரதி, பக்: 198, ரூ. 120/-, ஸ்ரீராம் பதிப்பகம், 13/2, பங்காள நகர், கன்னங்குறிச்சி, சேலம்-636 008. தொலைபேசி: 0427-2403720. செல்: 9944269950.

இந்தப் பகுதியில் இடம்பெற, பதிப்பாளர்கள் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். முகவரி: ஆன்மிக அலமாரி, ஆன்மிகம் பலன், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004

No comments:

Post a Comment